4087. அளவிட லுற்ற வயனொடு மாலு
 

     மண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
     முக்கணெம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மே லன்னந்
     தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவிற் றிருக்கு
     மிழலையா னெனவினை கெடுமே.        9

     9. பொ-ரை: பிரமனும், திருமாலும் முடியையும், அடியையும்
தேட முற்பட்டு, அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும், பூமி
மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண்
உடைய முதல்வரான சிவபெருமான். முத்துத் தரும் இதழ் விரிந்த
தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன்
இருக்க, நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும்
வயல்களைஉடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும்
பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும்.

     கு-ரை: கெண்டி - இடந்து. தாமரைப்பூ சிம்மாசனமாகவும்
அதன்மேல் பெடையோடிருந்த அன்னம் அரசியோடு வீற்றிருக்கும்
அரசனாகவும், கழனிகளில் விளைந்த நெற்கதிர்கள்
வெண்சாமரையாகவும் உருவகித்தமை அறிந்து மகிழத்தக்கது.