4088. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
       கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய வெழுந்தநஞ் சதனை
     யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
     குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        10

     10. பொ-ரை: கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும்,
ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள், உரைக்கும் மொழிகளை
ஏற்க வேண்டா. தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம்
உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான். உயர்ந்த
கமுகின் பழக்குலை விழ, அதனால் வாழையின் கனிகள் மதில்மேல்
உதிரும். மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம்
படியும். இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருநாமத்தை ஓத
வினையாவும் நீங்கும்.

     கு-ரை: மிகஉயர்ந்த வாழைமரத்தின் கனிகள், மதிலின்மேல்
திருச்சிற்றம்பலம் உதிருமாறு அவற்றின் உயர்ந்த கமுகின் பழக்குலை
விழ அவற்றினும் உயர்ந்த தென்னைமரங்களின் உச்சியில் மேகம்
படியும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்பது
பின்னிரண்டடிகளின் கருத்து.