4095. நலமில ராக நலமதுண் டாக
       நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
     தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
     கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண
     லாலவா யாவது மிதுவே.               6

     6. பொ-ரை: நல்ல குணங்களை உடையவராயினும், அவை
இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற்
பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது
அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர்
குலச்சிறையார். அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான்
ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத்
தோலைப் போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடை
முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.

     கு-ரை: தவம்பணி - தவமாகக் கொண்டு அடியாரைப்
பணிகின்ற. “எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும்
கண்டால் உள்கி ... ஈசன் திறமே பேணி” (தி.6.ப.61.பா.3) என்ற
திருத்தாண்டகக் கருத்து இப்பாடலின் முற்பகுதிக்குக்கொள்க.