4099. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்
       தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற
     குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்
     குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த
     வாலவா யாவது மிதுவே.              10

     10. பொ-ரை: சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும்
சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி,
அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும்
தன்மையுடையவர் குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற,
புத்த, சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண்
அடங்காத நெறியுடைய, இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தலம் இதுவேயாகும்.

     கு-ரை: தன் குணத்தினைக் குலாவக்கண்டு - (தனது -
சிவபெருமானது) குணங்களைப்பாராட்டும் அடியார்களைக்கண்டு
மகிழ்கின்ற குலச்சிறை.

.