4100. பன்னலம் புணரும் பாண்டிமாதேவி
 

     குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன்
     றிருவடி யாங்கவை போற்றிக்
 கன்னலம் பெரிய காழியுண் ஞான
     சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ
     ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.            11

     11. பொ-ரை: பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற
பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார்
என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர்
பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன்
திருவடிகளைப் போற்றி, கருப்பங் கழனிகளையுடைய சீகாழிப்
பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப்
பாமாலையாகிய இத்திருப்பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள்
தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

     கு-ரை: பல்நலம் - பலவிதமான செல்வ நலன்கள். புணரும் -
ஒருங்கே அமையப்பெற்ற. அந்நலம் - அத்தகைய வளம். கன்னல்
(அம்) கழனி - கருப்பங் கழனிகளை உடைய.