4105. |
பொன்னினார்
கொன்றை யிருவடங் கிடந்து |
|
பொறிகிளர்
பூணநூல் புரள
மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ
மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித்
தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே. 5 |
5.
பொ-ரை: இறைவர் பொன்போன்ற பெரிய கொன்றை
மாலையை வண்டுகள் கிளர்ந்து ஒலிக்கும்படி மார்பில்
அணிந்துள்ளவர். அத்துடன் முப்புரி நூலும் அணிந்துள்ளவர்.
மின்னல் போன்று ஒளியுடைய பாம்பை அணிந்துள்ளவர்.
திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். தம்மை வந்தடைந்த
சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறப்பொருள் உபதேசித்தவர்.
தொன்மைக்கோலம் உடையவர். மாறி மாறி உலகைப் படைத்தலும்,
அழித்தலும் செய்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
கு-ரை:
வடம் - மாலை. அறம் - இங்கே சரியை கிரியை
இரண்டையும் குறிக்கும். நல்ல சிவ தன்மத்தால் (திருக்களிற்றுப்
படியார் - 15.) எனக் கூறுவது அறிக.
|