4106. ஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு
       முமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியா ரல்லுநன் பகலு
     மடியவ ரடியிணை தொழவே
நண்பினா ரெல்லா நல்லரென் றேத்த
     அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.              6

     6. பொ-ரை: அன்பர்கள் இறைவனை, ‘ஒளிமிக்க பொன்
போன்ற தலைவரே வாழ்க’ எனவும், ‘உமையவள் கணவனே வாழ்க’
எனவும் போற்றுவர். அவரை நெருங்கி அணுகப்பெற்று, இரவும்,
பகலும் பிரியாராகித் திருவடிகளைத் தொழுவர். பத்தர்களெல்லாரும்
அவர் நன்மையைச் செய்பவர் என்று போற்ற, மற்றவர்கள் தீமையைச்
செய்பவர் என்று சொல்லும் தன்மையினையுடையவர். அப்பெருமான்
திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
பசுபதியார் ஆவர்.

     கு-ரை: அண்பினார் - அணுகப்பெற்றவர்களாகி. பிரியார் -
பிரியாமல் (அடியினைத்தொழ). இரண்டும் முற்றெச்சம்.
வினைதீர்த்தற்கண் இறைவன் புரியும் அறக்கருணை
மறக்கருணைகளில் மறக்கருணை பின்னர் இன்பம் தருவதாயினும்
முதற்கண் துன்பமாகத் தோற்றலின் அஃதறியார் தீயர் என்று
கூறி நன்மை அறிந்த பின்னர்த் துதிப்பர் என்னுங் கருத்தால்
“எல்லாம் நல்லவர் என்றேத்த ... ... ... தீயர் என்றேத்தும்” என்று
கூறினார். மறக்கருணைக்கும் அறக்கருணைக்கும் உதாரணமாக
“மண்ணுளே சில வியாதி மருத்துவ ,,, ருத்தியோடுந்
திண்ணமாயறுத்துக் கீறித்தீர்த்திடுஞ் சில ... ... ... கொடுத்துத்
தீர்ப்பன்.அண்ணலு மின்பத் துன்பம் அருத்தியே
வினையறுப்பன்” (சித்தியார் சூ.2, பா.35) என்பது அறிக.