4108. ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப
       வோசையா லாடல றாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே
     காலினாற் பாய்தலு மரக்கன்
வலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை
     வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.             8

     8. பொ-ரை: குழலும், முழவும் ஒலிக்க அவற்றின் ஓசையோடு
ஆடலும் நீங்காத மகிழ்ச்சியுடைய திருக்கயிலாய மலையைப்
பெயர்க்க இராவணன் அதன் கீழ்க் கையைச் செலுத்த, அது கண்டு
இறைவன் தம் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமையை அழியுமாறு செய்தார். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தவர். நல்ல வாழ்வு உடையவர் எனினும் பிரம கபாலத்தைக் கையிலேந்திப்
பிச்சை ஏற்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

     கு-ரை: கையினாலிட - பெயர்த்தெடுத்தற்குக் கையினைச்
செலுத்த. (கையினால் உருபு மயக்கம்) இது அரக்கன் செயல்.
காலினாற் பாய்தல். இது இறைவன் செயல். “ஏனை ... ... ... பலி
கொள்வர்” என்றது செல்வ வாழ்க்கையில் ஒரு குறைவுமில்லாதவர்.
ஆயினும், மண்டை ஓட்டில் பிச்சை எடுப்பர் என அசதியாடியவாறு.