| 
         
          | 4109. | சேற்றினார் 
            பொய்கைத் தாமரை யானுஞ் |   
          |  | செங்கண்மா 
            லிவரிரு கூறாத் தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார்
 துணைமையும் பெருமையுந் தம்மில்
 சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச்
 சரண்கொடுத் தவர்செய்த பாவம்
 பாற்றினார் போலும் பந்தணை நல்லூர்
 நின்றவெம் பசுபதி யாரே.              9
 |        9. 
        பொ-ரை: சேறு நிறைந்த பொய்கையில் மலரும் தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனும், சிவந்த கண்களையுடைய
 திருமாலும் முறையே அன்ன உருவெடுத்து மேல்நோக்கி வானிலும்,
 பன்றி உருவெடுத்துக் கீழ்நோக்கிப் பாதாளத்திலும் இறைவனின்
 முடியையும், அடியையும் தேடிச்செல்ல, அறியாது தோற்றனர்.
 இறைவனின் தொன்மைத் தோற்றத்தை அறியாது துணையையும்,
 பெருமையையும் தமக்குள் பேசித் தாமே பரம் எனப் பேசினர். பின்
 இறைவனிடம் யாம் வலியில்லோம் என்று முறையிட்டுத் தம் பிழையை மன்னிக்க வேண்ட, 
        அவர் அவர்கட்குச் சரண் கொடுத்து அவர்களது
 பாவத்தை மாற்றியருளினார். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூரில்
 வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
       கு-ரை: 
        பாற்றினார் - நீக்கினார்.  |