4110. கல்லிசை பூணக் கலையொலி யோவாக்
       கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா
     நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி
     மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
     தொல்வினை சூழகி லாவே.            11

   11. பொ-ரை: கற்கும் ஓசைகள் நிறைந்து கலைகளின் ஒலி
நீங்காத திருக்கழுமலம் என்னும் பழமையான நகரில் அவதரித்த
நல்ல பெருமையினையுடையவனும், அற்பர்களான புறச்சமயிகளின்
மொழியைக் கேளாதவனுமாகிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
பற்களுடன் கூடிய பிளந்த வாயினையுடைய மண்டை ஓட்டை
ஏந்தியவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தைப் போற்றி அருளிய
பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர்களைத் தொல்வினை வந்து
சூழாது

.      கு-ரை: கல்லிசை - கற்கும் ஓசை. பல்லிசை - பற்கள்
பொருந்திய (மண்டையோடு). திருஞானசம்பந்தர் புராணம் ஆங்கணி
சொன்மலர் மாலை சாத்தி அப் பாங்குபந் தண நலூர் பணிந்து
பாடிப் போய்த் தீங்கு தீர் மாமறைச் செம்மை அந்தணர் ஓங்கும்ஓ
மாம்புலி யூர்வந் துற்றனர். - சேக்கிழார்.