4119. தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர்
       தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக்
     கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து
     நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            10

     11. பொ-ரை: தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய
புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள
உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், நள்ளிருள், யாமம்
முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி
தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை
வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள்
வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும்
திருக்கோயிலாகும்.

     கு-ரை: கலதிகள் - கொடியவர்கள். ‘கள்வன் கடியன்
கலதியிவன் என்னாதே’. (தி.8 திருவாசகம்.10.19.)