4123. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
       படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
     மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந்
     தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
     கோணமா மலையமர்ந் தாரே.           3

     3. பொ-ரை: சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான
சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த
சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய
உமாதேவியைச் சிவபெருமான் ஒரு பாகமாக உடையவர். மேரு
மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த
ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த
திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்

     கு-ரை: பனித்திளந்திங்கள் - குளிர்ந்த இளம்பிறை. பனித்த -
பெயர்ச்சொல் அடியாகப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். “பனித்த
சடையும்” எனஅப்பர் வாக்கிலும் பயில்கிறது. பனித்த + இளம் =
பனித்திளம். பெயரெச்ச விகுதி கெட்டது.