4125. தாயினு நல்ல தலைவரென் றடியார்
       தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
     மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி
     நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
     கோணமா மலையமர்ந் தாரே.           5

     5. பொ-ரை: தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள்
சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர்
அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல
கோலங்களை உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய
அடியவர்கள்பால் நோய், பிணி முதலியன தாக்காவண்ணம்
காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். இவ்வுலகில்,
திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும்
திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண
மாமலை. இன்றும் இதனை நேரில் காணலாம்.