4128. அருவரா தொருகை வெண்டலையேந்தி
 

     யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
     பெருங்கடல் வண்ணனும் பிரமன்
 இருவரு மறியா வண்ணமொள் ளெரியா
     யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
     கோணமா மலையமர்ந் தாரே.           9

     9. பொ-ரை: அருவருப்பு இல்லாமல் பிரமனின்
வெண்தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில்
துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா
வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து
நின்றவர்.திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள்
கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகக் தாமரை போன்ற
தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர்.அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம்
திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: குருவர் - குரு ஆனவர்.