4133. அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
  நடைமட மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.         3

     3. பொ-ரை: திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும்
திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சடையில்
வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர்
பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர்.
அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில்
மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர்.

     கு-ரை: அடையலர் - பகைவர்; நகர்மூன்று - திரிபுரம்.