4140. |
வல்லியந்
தோலுடை யார்ப்பது போர்ப்பது |
|
கொல்லியல்
வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமான் வலிமையான புலியின் தோலை
ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின்
தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான்
சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால்
தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில்
பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும்
வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின்
இயல்பாகும்.
கு-ரை:
இறைவன் கோலம்: வல்லியந் தோல் - புலித்தோல்
வன்மைக்கு இனமாகத் திரிந்தது. செவிக் கினிமை கருதி. உடை
ஆர்ப்பது - உடையாக இடுப்பில் உடுப்பது; வேழத்துரி போர்ப்பது -
யானையின் தோல் போர்வையாகப் போர்ப்பது. விரி கோவணம் -
படம் விரித்த பாம்பினைக் கோவணமாகக் கட்டுவது. விரி -
முதனிலைத் தொழிற்பெயர். ஆகுபெயர். நல்லியலார் - நற்பண்புகளை உடைய மெய்யடியார்.
இவை நல்லூர்ப் பெருமண வாழ்க்கை எம்
புண்ணியனார் கோலங்களாம்.
|