4143. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
  பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.       7

     7. பொ-ரை: இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட
திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன்.
வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை
ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய
புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன்.
அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான்
திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப்
போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம்
புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே
புரிந்தருள்வன்.

     கு-ரை: அம்பிகையின் சிறப்பு: மேகத்தகண்டன் - காளமேகம்
போலும் கரிய கண்டத்தை உடையவன். எண்தோளன் - எட்டுத்
தோள் களையுடையவன். வெண்ணீற்றுமை பாகத்தன் -
திருவெண்ணீற்றுமை யம்மையை இடப்பாகமாக உடையவர். பந்தித்த
- கச்சாகக் கட்டிய. நாகத்தன் - பாம்பை உடையவன். (நல்லூர்ப்
பெரு மணத்தான்). நல்ல போகத்தன் - உமையம்மையை இடப்
பாகமாக உடையவனாகி மிக்க போகத்தை உடையவன்போல்
காணப்படினும். யோகத்தைப் புரிந்தான் - உண்மையில் அவன்
யோகத்தையே செய்தான்.