4150. கரையார் கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத்
  திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.      3

     3. பொ-ரை: கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில்
தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச்
சூடியவரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும்
நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும்
ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.