4151. கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
  பாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்
வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்
வீசக் களியன் னமல்கும் விடைவாயே.         4

     4. பொ-ரை: கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்து
வந்த கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது
இடம், மணம் பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர்
வெண்சாமரை போலவீச, அன்னம் மகிழ்வோடு உடையும்
திருவிடைவாய் என்பர்.