80. திருவீழிமிழலை - திருவிராகம் - சாதாரி
 
3657. சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள்
                                                            பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம்
                                                      கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு
                                              வீழிநகரே.          1
உரை
   
3658. பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி
                                                                  நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள்
                                                      மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு
                                                          பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள்
                                                       வீழிநகரே.      2
உரை
   
3659. மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
                                                   உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில்
                                                    இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட,
                                                      அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு
                                                        வீழிநகரே.     3
உரை
   
3660. செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த
                                                         அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
                                                             அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம்
                                                             பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி
                                                வீழிநகரே.         4
உரை
   
3661. பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது
                                                          இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி
                                                           அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில்
                                                   வீழிநகரே.       5
உரை
   
3662. மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும்
                                                              உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
                                   பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற
                                                            புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
                                                  வீழிநகரே.        6
உரை
   
3663. மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை
                                                                    போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி
                                                    இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே. 7
உரை
   
3664. ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன்
                                                                   ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த
                                                               மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி
                                                 வீழிநகரே.       8
உரை
   
3665. ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன
                                                                உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன்
                                                                       ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம்
                                               கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ்
                                                         வீழிநகரே.    9
உரை
   
3666. குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
                                          குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
                                             என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு
                                                         பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில்
                                                         வீழிநகரே.   10
உரை
   
3667. மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன்,
                                                        வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள்
                                                                       வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு
                                                         அவரதே.   11
உரை