4.13 திருஐயாறு
பழந்தக்கராகம்
124விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
125செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
126நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின்
துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே!
மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும்
அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
127ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
128சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
129“நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே!
பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்!” என்று
ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
130கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
131மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
132முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், “எம்பெருமான்” என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை
   
133கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், “பேர் நந்தி” என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
உரை