4.28 திருஅதிகைவீரட்டானம்
திருநேரிசை
278முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
279கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி
நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்!
பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே!
உரை
   
280“நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், “இணை அடி தொழுதோம்” என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.
உரை
   
281சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்-
படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே
உரை
   
282மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே
உரை
   
283மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி,
மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து,
கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன
கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே.
உரை