4.45 திருஒற்றியூர்
திருநேரிசை
444வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
445வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
446தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
447காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
448சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
449ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
450பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
451பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
452முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.
உரை
   
453வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.
உரை