4.3 திருஐயாறு
காந்தாரம்
 

3. திருவையாறு

பதிக வரலாறு:

கயிலைமலை காணக் காதலித்த கலைவாய்மைக் காவலனாராகிய தமிழாளியார் கால் தேயக், கை சிதைய, மார்பு நைய, என்புமுரிய, ஊன் கெடப் பழுவம் புரண்டு புரண்டு சென்று, அங்கம் எங்கும் அரைந்திடப், புறத்து உறுப்பழிந்தபின் அகத்து முயற்சியும் தப்புறச், செயலற்று அந்நெறியில் தங்கினார். மன்னுதீந்தமிழ்ப் புவியின் மேற் பின்னையும் வழுத்த வேண்டிக் கயிலையை அணைவதற்கு அருளாத பன்னகம்புனை பரமர் ஓர் முனிவராம்படி தோன்றி, மொழி வேந்தர் குறிப்பைக் கேட்டு ‘மானுடப்பான்மையோர் அடைவதற்கு எளிதோ கயிலை மால்வரை? மீள்வதே உமக்குக் கடன்’ என்றார். ‘ஆளும் நாயகன் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்‘ என்றார் மீளா ஆளாய அப்பர். மாதவர் விசும்பிற் கரந்தார். ‘ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு!‘ என்றார். சொல் தவறாத அரசர் எழுந்து ஒளி திகழ்வாராய், ‘அண்ணலே! அமுதே! திருக்கயிலையில் இருந்த நின்கோலத்தை நான் தொழ அருள்புரி; என்றார். ‘அம்முறைமை திருவையாற்றிற் காண்; என்றார் இறைவர்.

திருப்பாடல் பல பாடித் திருவைந்தெழுத்து ஓதி முழுகினார், அங்கிருந்த ஒரு திருக்குளத்தில். பின் திருவையாற்றுத் திருக்குளத்தில். தோன்றிவந்தெழுந்தார் சொல்லரசர். இரு கண்ணீரிலும் குளித்தார். நிற்பவும் சரிப்பவும் துணையொடும் பொலியக் கண்டார். அவற்றில் சத்தியும் சிவமும் ஆம் சரிதையைப் பணிந்தார். தேவர் முதல் யாவரும் சூழ மலையாளுடன் வீற்றிருந்த வள்ளலாரைக் கண்டார் வாகீசர். கண்ட ஆனந்தக் கடலைக் கண்களால் முகந்து கொண்டார்; உருகினார்; ஆடினார்; பாடினார்; அழுதார். அவர்க்கு அங்கு நிகழ்ந்தனவற்றைச் சொல்லவல்லார் யார்? அருள் தண்ணளி செய்து எதிர்நின்றது ஐயாற்றில் உள்ள அழியாத் தேனை உண்டு களித்தார் உரை வேந்தர்; பதிகம் பல பாடினார். அவற்றுள் ஒன்று கோதறு தண்டமிழ்ச் சொல்லாகிய இத் திருப்பதிகம்.

பண்: காந்தாரம்

பதிக எண்: 3

திருச்சிற்றம்பலம்

21.மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

1

1. பொ-ரை: விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.

கு-ரை: மாதர்ப்பிறை - அழகுடைய பிறை. பிறைக்கு அழகு முழுமுதற் பொருளின் தலைமேல் வாழ்தலும், வளராத் தேயாச் சிறப்பும், பாம்பினை அஞ்சாமையுமாம். ‘அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே’ (புறநானூறு கடவுள் வாழ்த்து) என்னும் அதன் சிறப்புணர்க. பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி. தலைமாலை. கண்ணி - தலையில் அணிவது; ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை. போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய பூவும் புனலும். புகுவார் -அடியவர். யாதும் என்பது ஆதும் என்றாதலுண்டு ‘சென்று ஆதுவேண்டிற்று ஒன்று ஈவான்’ (தி.6 ப.20 பா.9) ‘நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதியான்’(தி.2ப.84ப.ா8) என அரசும் கன்றும் அருளிய வற்றாலும் அறிக. நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் ‘ஆதும் இல்லை’‘ஆதும் ஓர் பற்றிலாத பாவனை’ எனல் காண்க. ‘யாதேசெய்தும் யாம் அலோம் நீஎன்னில் ‘ஆதே’ ‘ஏயும் அளவில் பெருமையான்’ (திருக்குறுந்தொகை) என்பதில் அதுவே என்னும் பொருட்டு ஆதலின் அதுவேறு. சுவடுபடாமை:- ‘பங்கயம்புரைதாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் கைகளும் மணிபந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தருகவும்’ ‘மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்’‘உடம்பு அடங்கவும் ஊன் கெடவும்’, சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்’ (தி.12. அப்பர். 357-360)உறுப்பழியவும் நின்ற சுவடு தோன்றாமல், தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வாராய்ச் செல்லும் தூய்மை தோன்றல்.

பிடி - பெண் யானை. களிறு - ஆண்யானை; களிப்புடையது என்னும் காரணப்பொருட்டு. பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால்திருப்பாதம் சிவாநந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டேன் என்று தம் பேரின்ப நுகர்ச்சியைப் புலப்படுத்தினார். பின் உள்ள எல்லாவற்றினும் பிறையும் பெருமாட்டியும் முதலடியிற் கூறப்பெற்றிருத்தல் அறிக. காட்சியருளிய பிறை சூடி (சந்திரசேகரர்) கோயில், அகச்சுற்றின்கண் தென்மேற்கு மூலையில் உளது.