பாடல் எண் :1461
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.

6
பொ-ரை: கலைகளை ஆய வல்லவனும், கயிலாயமலை உடையவனுமாகிய பெருமானின் நிலையை சொல்லும் நெஞ்சமே! பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய்!
கு-ரை: நிலைமை சொல்லு நெஞ்சே - நெஞ்சே! உன் தவத்தின் நிலைமையை உண்மையாக எனக்குச் சொல். கலைகளாய என்பதற்குக் கலைகள் ஆயன எனவும் ஆய்வதற்கு எனவும் பொருள் கொள்க. கயிலாயநன் மலையன் - திருக்கயிலாயத் திருமலையிலே எழுந்தருளியிருப்பவன். மயிலாடுதுறையன் தலையின் மேலும் மனத்துள்ளும் எழுந்தருளும் வண்ணம் என்ன தவத்தைச் செய்தாய் சொல் என்று நெஞ்சை விளித்துக்கேட்கும் முறையில் அமைந்தது. உள்ளும் புறமும் வழிபடல் குறிப்பு.