|  |  | பாடல் எண் :1496 |  | | கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் இல்லத் தார்செய்ய லாவதெ னேழைகாள்
 நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
 சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே.
 | 
 |  | 1 |  | பொ-ரை:  அறிவற்றவர்களே! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும், நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல், உம்துயர்கள் தீரும். கு-ரை:  தான், அசை, நமனார் தமர் - எமதூதர். கொல்ல வந்தக்கால் - உயிர்கொள்ள வந்த இடத்து. இல்லத்தார் - மனைவி மக்கள் முதலாயினார். ஏழைகாள் - அறிவில் மெல்லியரே; சொல்ல வல்லிரேல் என்க.
 | 
 |