|  |  | பாடல் எண் :1572 |  | | கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
 வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம்
 சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தெனகொலோ.
 | 
 |  | 4 |  | பொ-ரை:  அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை; கண்ணெதிரே கண்டேன்; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை; ஒக்கவே ஓடிவந்தேன்; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ? கு-ரை:  கழியக் கண்டிலேன் - அவர் மறைவதைப் பார்த்தேனில்லை; மறைந்திலர் என்பதாம். கண்ணெதிரே கண்டேன் - கண்ணெதிரே பார்த்தேன்; தோன்றிக்கொண்டே இருந்தார். ஒழியப்போந்திலேன் - அவரைவிட்டுத் திரும்பவில்லை. ஒக்கவே - அவருடன் சேரவே. ஓட்டந்தேன் - ஓடினேன். வழியில் கண்டிலேன் - அங்ஙனம் ஓடிவந்தும் இடையிலே அவரைக் காணவில்லை. சுழி - வாய்மூர் இறைவரது திருவிளையாடலாகிய சுழல்.
 | 
 |