பாடல் எண் :1599
தூர்த்தன் தோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.

10
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும், முடிகளும், தாள்களும் தொலையுமாறு திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர்; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர்.
கு-ரை: தூர்த்தன் - தீ ஒழுக்கமுடையவன். தொலைய - அழிய. ஒரு விரல் சேர்த்தினார் என்க. உலகத்தார் ஆர்த்து வந்து என்க. ஆர்த்து - ஆரவாரம் செய்து. ஆடிடும் - மூழ்குகின்ற. தீர்த்தர் - தீர்த்தமாயிருப்பவர். தீர்த்தங்களின் வடிவமாயிருப்பவர் எனலுமாம்.