|
| பாடல் எண் :1675 | இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள் அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. |
| | 4 | பொ-ரை: அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர். கு-ரை: இருந்து - அமைந்திருந்து. ஏழைகாள் - அறிவற்றவர்களே. அருந்தவந்தரும் - பெறுதற்கரிய தவத்தினாலாம் பயனைத்தரும். பொருந்து - உடலிற் பொருந்திய. நோய் - துன்பம். பிணி - நோய். துரப்பதோர் - நீக்குவதொரு. மன்னும் - நிலைபெற்ற. |
|