பாடல் எண் :1707
நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே
.

8
பொ-ரை: நம் தமராகிய தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக.
கு-ரை: நாடி- சென்று. நம் தமராய -நம்முடைய சுற்றத்தினராய. ஆடுமின் -மகிழ்ச்சிக் கூத்தாடுங்கள். "ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை தெருவுதோறலைகிலை செய்வதொன்றறியேனே". (தி.8 திருவாசகம் -35.)