|
| பாடல் எண் :1767 | பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. |
| | 8 | பொ-ரை: உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும், எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக. கு-ரை: பிணித்த - நம்மைப் பிணித்து நிற்கின்ற நோய்ப் பிறவி - பிறவியாகியநோய்; அல்லது நோயும் பிறவியும். பிரிவெய்து மாறு - நீங்கும்படி. உணர்த்தலாம் - பிறவி என்னை விட்டு நீங்க ஆணையிட்டு உணர்த்தலாம். நீங்கள் பிறப்பு நீங்குதலோடு பிறர்க்கும் உணர்த்தலாம். உருத்திரகணத்தினார் - சிவகணங்கள்; அடியார் கூட்டம். குணத்தினான் - நற்குணங்களின் வடிவாயிருப்பவன். சேர்வீராயின் நீங்கள் பிறவிநோயில் நீங்குதல் மட்டுமின்றிப் பிறர்க்கும் பிறவியை நீக்கும் ஆசாரியத் தலைமையைப் பெறுவீர்கள் என்றபடி. "ஒரு நீயாகித் தோன்றப் பெறலரும் பரிசில் நல்கும்" என்பது திருமுருகாற்றுப்படை. |
|