பாடல் எண் :1794
நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே
.

5
பொ-ரை: " நேசத்துக்குரிய நீலக்குடி அரனே!" என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர்.
கு-ரை: நேச - அன்பர்க்கு அன்பனே! எனா - என்னாத. நெடுமால் - திருமால். மாயம் - சூழ்ச்சிச் செயல். நெடுமால் செய்த மாயத்தால் நீசராய் என மாறுக. நீசர் - வெறுக்கத்தக்கவர். ஓர் சரம் - ஓர் அம்பு. நாசமானார் - அழிந்தனர் - திரிபுரநாதர் - திரிபுரங்களுக்குத் தலைவர். திருமால் செய்த மாயமாவது, தாரகாசுரன் புதல்வராகிய கமலாக்ஷன். வித்யுன்மாலி, தாரகாக்ஷன் என்ற மூவரும் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றுப் பல நகரங்களையும் அழித்துவந்தனர். அதைக் கண்ட திருமால் புத்தராய் நாரதரை அனுப்பி அவர்களுக்குப் புற மதத்தை உபதேசித்து அவர்கள் பெருமானிடம் கொண்டிருந்த பக்திக்கு ஊறு விளைக்கச் செய்து திரிபுரங்களைப் பெருமான் அழிக்கும்படி, செய்தார்.