|  |  | பாடல் எண் :1853 |  | | வீறு தான்பெறு வார்சில ராகிலும் நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
 கூறு வேன்கோடி காவுளா யென்றுமால்
 ஏறு வேன்நும்மா லேசப் படுவனோ.
 | 
 |  | 5 |  | பொ-ரை: கோடிகாவில் உள்ள இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளாதவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர் மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ? கு-ரை: வீறுதான் - பெருமிதத்தினை. பெறுவார் - கொள்ளுவார். சிலர் - சில பெண்கள். இறைவனை அடைந்த அடியவர் அருளிறுமாப்புக் கொள்ளுவார்கள். "இறுமாந்திருப்பன்கொலோ ஈசன் பல்கணத்தெண்ணப்பட்டுச் சிறுமானேந்தி தன்சேவடிக்கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ" (தி.4.ப.9.பா.11) என்பது ஓர்க. நாறு - மணம் கமழ்கின்ற. பூங்கொன்றை - அழகிய கொன்றை மலர். தான் - அசை. மிகு - மிகுதியாக. நல்கானேல் - தாராதொழிவானேயானால். கோடிகா உளாய் என்று கூறுவேன் மால் ஏறுவேன் என்க. கோடிகா உளாய் - கோடிகாவில் எழுந்தருளியவனே. மால் ஏறுவேன் - காமமயக்கம் அதிகமடைவேன். நும்மால் - உம்மால். ஏசப்படுவனோ - உம்மால் இகழப்படுதற்கு உரியவளாவேனோ.
 | 
 |