பாடல் எண் :1861
குற்ற மில்லியைக் கோலச் சிலையினால்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

6
பொ-ரை: குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.
கு-ரை: குற்றமில்லி - இருவினைக் குற்றமில்லாதவன். கோலச்சிலை - அழகிய இமயவில் (மேருமலையாகிய வில்). செற்றவர் - உலகை அழித்து வந்த திரிபுராதிகள். புரம் - கோட்டை, செந்தழலாக்கி - சிவந்த நெருப்பு உண்ணும்படிச் செய்தவன். புற்றரவன் - புற்றிலே உள்ள பாம்பை அணிந்தவன். பற்றவல்லவர் - அடையவல்லவர். பறையும் - நீங்கும்.