|
| பாடல் எண் :1874 | இலங்கை வேந்த னிருபது தோளிற்று மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே. |
| | 10 | பொ-ரை: இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர். கு-ரை: இலங்கை வேந்தன் - இராவணன். இற்று - நெரிந்து. மலங்க - வருந்த. மாமலைமேல் - சிறந்த திருக்கயிலை மலையின் மேல். அலங்கல் - மலர்மாலை. வலங்கொள்வாரை - வலமாகச் சுற்றி வணங்குவாரை. |
|