|  |  | பாடல் எண் :1907 |  | | வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர் சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
 காலையேதொழுங் காட்டுப்பள் ளிய்யுறை
 நீல கண்டனை நித்தல் நினைமினே.
 | 
 |  | 8 |  | பொ-ரை: அறிவற்றவர்களே! வேலை, அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி, நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர்; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக. கு-ரை: வேலை வென்ற கண்ணார் - கூர்மையால் சென்று தைத்தலில் வேலை வெற்றிகொண்ட கண்களை உடைய பெண்கள். திகையன்மின் - உலகவாழ்விலேயே திகைத்துச் செயலற்று நிற்காதீர்கள். காலையே தொழும் - உடலில் உயிர் உள்ள காலத்திலேயே தொழுது வணங்குங்கள். நித்தல் - நாடோறும்.
 | 
 |