|
பாடல் எண் :1921 | நாடி வந்து நமன்தமர் நல்லிருள் கூடி வந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாட லுகந்தவாட் போக்கியை வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே. |
| 8 | பா-ரை: எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து, நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும். கு-ரை: நாடி - தேடி. நமன்தமர் - எமதூதர். நல்லிருள் - நல்ல நடு இரவில். கூடிவந்து - சேர்ந்துவந்து. குமைப்பதன்முன் - நம் உயிரை வருத்திக்கொண்டு போகுமுன்னே. ஆடல் பாடல் உகந்த - ஆடுதல் பாடுதல் ஆகிய கலைகளில் விருப்பமுடைய. வாடி - வருந்திச் சென்றடைந்து. ஏத்த - தோத்திரிக்க. வாட்டம் - துன்பம். தவிரும் - நீங்கும். |
|