|
பாடல் எண் :1972 | தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் உள்ளத் தேற லமுத வொளிவெளி கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே. |
| 10 | பொ-ரை: மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு? கு-ரை: தெள்ளத்தேறித்தெளிந்து - தெள்ளத் தெளிவிக்க நானும் உண்மையெனத் தேறித் தெளிவடைந்து. தித்திப்பதோர் - இனிப்பதொரு. உள்ளத்தேறல் - மனத்தின்கண் விளையும் தேன். அமுத ஒளிவெளி - அமுத கிரணத்தை உடையவெளி. கள்ளத்தேன் - வஞ்சகத்தன்மையை உடையவன். கடியேன் - வெறுக்கத்தக்கவன். கவலைக்கடல் வெள்ளத்தேனுக்கு - மனக்கவலை என்னும் கடல் வெள்ளத்தை உடையவனாகிய எனக்கு. எவ்வாறு விளைந்தது - எப்படி உள்ளத்தே தேனும் அமுதமுமாய் விளைந்தது. |
|