5.28 திருஐயாறு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1345

சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

1
உரை
பாடல் எண் :1346

மூல வண்ணத்தராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர்
நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.

2
உரை
பாடல் எண் :1347

சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்,
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

3
உரை
பாடல் எண் :1348

இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,
அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

4
உரை
பாடல் எண் :1349

இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்,
மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும்,
அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5
உரை
பாடல் எண் :1350

இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி
அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

6
உரை
பாடல் எண் :1351

விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்,
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்,
அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

7
உரை
பாடல் எண் :1352

ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

8
உரை
பாடல் எண் :1353

செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

9
உரை
பாடல் எண் :1354

எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

10
உரை