5.43 திருநல்லம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1496

கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

1
உரை
பாடல் எண் :1497

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே,
துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ;
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்,
நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.

2
உரை
பாடல் எண் :1498

பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்!
அணுக வேண்டில், அரன்நெறி ஆவது;
நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!

3
உரை
பாடல் எண் :1499

தமக்கு நல்லது; தம் உயிர் போயினால்,
இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்;
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி-
நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.

4
உரை
பாடல் எண் :1500

உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்,
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின்! பணிமின்! பணிவாரொடே
விரவுமின்! விரவாரை விடுமினே!

5
உரை
பாடல் எண் :1501

அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும்,
வல்ல ஆறு ழுசிவாய நமழு என்று,
நல்லம் மேவிய நாதன் அடி தொழ,
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

6
உரை
பாடல் எண் :1502

மாதராரொடு, மக்களும், சுற்றமும்,
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர் தொழப்
போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.

7
உரை
பாடல் எண் :1503

வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர்,
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்;
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ,
நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!

8
உரை
பாடல் எண் :1504

காலம் ஆன கழிவதன் முன்னமே,
ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின்
மாலும், மா மலரானொடு, மாமறை-
நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!

9
உரை
பாடல் எண் :1505

மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி,
நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.

10
உரை