5.56 திருக்கோளிலி
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1632

மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத்
தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன்,
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனை, தொழ நம்வினை நாசமே.

1
உரை
பாடல் எண் :1633

முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை,
வித்தினை, விளைவு ஆய விகிர்தனை,
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.

2
உரை
பாடல் எண் :1634

வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர்
கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை,
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

3
உரை
பாடல் எண் :1635

பலவும் வல்வினை பாறும் பரிசினால்-
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
குலவினான், குளிரும் பொழில் கோளிலி
நிலவினான்தனை,-நித்தல் நினைமினே!

4
உரை
பாடல் எண் :1636

அல்லல் ஆயின தீரும்; அழகிய
முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே,
கொல்லை யானை உரித்தவன், கோளிலிச்
செல்வன், சேவடி சென்று தொழுமினே!

5
உரை
பாடல் எண் :1637

ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப்
பாலன் வேண்டலும், ழுசெல்!ழு என்று பாற்கடல்
கூவினான், குளிரும் பொழில் கோளிலி
மேவினானை, தொழ வினை வீடுமே.

6
உரை
பாடல் எண் :1638

சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்,
கூத்தனார் உறையும் திருக்கோளிலி
ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.

7
உரை
பாடல் எண் :1639

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்!
காலம் வந்து கடை முடியாமுனம்
கோல வார் பொழில், கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!

8
உரை
பாடல் எண் :1640

கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது
தேடி, நீர், திரியாதே சிவகதி
கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின்(ன்), இரவோடு பகலுமே!

9
உரை
பாடல் எண் :1641

மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை
அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள்
கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ,
விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.

10
உரை
5.57 திருக்கோளிலி
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1642

முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

1
உரை
பாடல் எண் :1643

விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,
மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,-
பண் உளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!

2
உரை
பாடல் எண் :1644

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்;
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்;
ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே,
கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!

3
உரை
பாடல் எண் :1645

விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில்,
பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி-
அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக்
குழகனார் திருப்பாதமே கூறுமே!

4
உரை
பாடல் எண் :1646

மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை,
காலன் ஆகிய காலற்கும் காலனை,-
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச்
சூலபாணிதன் பாதம் தொழுமினே!

5
உரை
பாடல் எண் :1647

காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-
நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை,
ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி
ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!

6
உரை
பாடல் எண் :1648

வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை,
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே!

7
உரை
பாடல் எண் :1649

நீதியால் - தொழுவார்கள் தலைவனை,
வாதை ஆன விடுக்கும் மணியினை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேதநாயகன் பாதம் விரும்புமே!

8
உரை
பாடல் எண் :1650

மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப்
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி
நீலகண்டனை, நித்தல் நினைமினே!

9
உரை
பாடல் எண் :1651

அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

10
உரை