6.26 திருஆரூர்
திருத்தாண்டகம்
263பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை,
      பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
   வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை,
    சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை, 
      -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.