727பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள்
               பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்;
    எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய்
            வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில்
             கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.