398பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
   பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்;
மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்;
   வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்;
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்;
   தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்;
மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.