761வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள்,
   வன்னியொடு, விரிசடை மேல் மிலைச்சினான் காண்;
பொறி விரவு கதம் நாகம், அக்கினோடு பூண்டவன்
        காண்; பொரு புலித்தோல் ஆடையான் காண்;
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்;
    ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல்
செறி பொழில் சூழ் மணி மாடத் திருப் புத்ரில்-
     திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.