6.68 திருமுதுகுன்றம்
திருத்தாண்டகம்
681கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
             கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை,
குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை,
        கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை,
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை,
         ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,
            தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.