6.66 திருநாகேச்சுரம்
திருத்தாண்டகம்
661தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
       தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை,
          அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள்
               மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை,
              சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.