6.48 திருவலிவலம்
திருத்தாண்டகம்
479நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண்,
                           நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண்,
               மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச்
சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு
                   ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்
                     காண்; அவன் என் மனத்து உளானே.