312நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும்,
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”
    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.