6.72 திருவலஞ்சுழி
திருத்தாண்டகம்
723அலை ஆர் புனல் கங்கை நங்கை காண
              அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும்
                     மேவி, விடையை மேற்கொண்டு,
இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும்
           இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,
மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த
              வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.